பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தை தொடங்க திட்டம் - எஸ்டிபிஐ கண்டனம்
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் அத்தனை அம்சங்களையும் நடைமுறைப்படுத்தும் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழகத்தில் தொடங்க திட்டமிட்டுள்ள திமுக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எனவும், மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் குழுவை வேகப்படுத்தி, விரைவில் மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் அத்தனை அம்சங்களையும் நடைமுறைப்படுத்தும் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழகத்தில் தொடங்க திட்டமிட்டுள்ள திமுக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த திட்டத்தின் அம்சங்களை ஒவ்வொன்றாய் செயல்படுத்தும் நடவடிக்கை என்பது கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக அரசின் இரட்டை நிலையை அம்பலப்படுத்துகிறது.
ஏற்கனவே திமுக அரசால் செயல்படுத்தப்பட்ட இல்லம் தேடி கல்வி மற்றும் துவக்கக் கல்வி மாணவர்களுக்கான திறனறித் தேர்வு திட்டம் உள்ளிட்டவை ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை அம்சங்களை கொண்டதாக உள்ளன என்றும், இந்த திட்டங்கள் கொல்லைப்புறம் வழியாக தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வாய்ப்பாக அமைந்துவிடும் என பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் மற்றும் கல்வியாளர்களும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தற்போது வெளிப்படையாகவே புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் விதத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ்நாட்டின் தனித் தன்மையுடன் சமூகநீதி கண்ணோட்டத்தில் மாநில கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு, அது விரைவாக நடைமுறைப்படுத்தப்படும் என்று எல்லோரும் நம்பிக்கை கொண்டிருந்த தருணத்தில், ஒருபுறம் மாநில கல்விக்கொள்கை வரைவுக் குழுவின் மீதான செயல்பாடுகள் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் நேரத்தில், மறுபுறம் மாணவர்களின் கல்வியை தரம் பிரிக்கும், கற்றலை ஒரு போட்டியாக கருதும், சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடிக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையின் திட்டங்கள் மறைமுகமாக உயர்கல்வி தொடங்கி அனைத்து இடங்களிலும் ஒவ்வொன்றாய் அமல்படுத்தப்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கின்றது. புதிய கல்விக் கொள்கையை எந்த விதத்திலும் திமுக அரசு ஏற்காது என்று தமிழக முதல்வர் அவ்வப்போது தெரிவித்து வந்தாலும் நடக்கும் நிகழ்வுகள் அதற்கு நேரெதிராகவே உள்ளன.
புதிய தேசிய கல்விக் கொள்கையை முற்றிலும் நிராகரிப்பதாக 2021 தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறியிருப்பது ஏன்? ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின்சார கட்டணம், சொத்துவரி போன்றவை உயர்த்தப்பட்டதாக பூசி மெழுகியது போன்று, ஒன்றிய அரசிடமிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய கல்வி மேம்பாடு நிதியை பெறுவதற்காகவே பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்திற்கு இசைவு தெரிவித்திருப்பதாக சப்பைக்கட்டு கட்டுவதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, கல்விக் கொள்கை என்பது ஒரு தலைமுறையின் கல்வியை தீர்மானிக்கக் கூடியது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கொள்கையில், கற்றலின் திறனை வெளிப்படுத்த முடியாத மாணவர்களை துவக்கத்திலேயே தொழில் கல்விக்குத் தள்ளிவிடுவது, கல்வியை சந்தை மயமாக்குவது உள்ளிட்ட பல பிரச்சினைகளை ஏற்படுத்தும், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒன்றிய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழகத்தில் தொடங்கும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் குழுவை வேகப்படுத்தி, விரைவில் மாநில கல்விக் கொள்கையை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.