தமிழகத்தில் பிரதமர் மோடி மூன்று நாள் சுற்றுப்பயணம்

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண விவரம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-01-18 12:09 GMT

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண விவரம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  


நாளை மாலை 4 மணிக்கு பெங்களூரிலிருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தில் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி , மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு  ஆளுநர் , முதலமைச்சர் , அரசியல் கட்சித் தலைவர்கள் , முக்கிய விருந்தினர்கள் என பலர் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.

விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஐஎன்எஸ் அடையாறு கடற்படைத் தளத்தை 5.15 மணிக்கு வந்தடையும் பிரதமருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு வழங்குகின்றனர். பின்னர் ஐஎன்எஸ் அடையாறு கடற்படைத் தளத்திலிருந்து பாதுகாப்பு வாகனங்கள் முன்னும் பின்னுமாய் அணிவகுக்க நேப்பியார் பாலத்தை கடந்து சிவானந்தா சாலை, பல்லவன் சாலை வழியாக நேரு விளையாட்டு அரங்கத்தை மாலை 6 மணிக்கு சென்றடைகிறார் பிரதமர். பிரதமர் பயணிக்கும் சாலையில் பாஜக சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடனும் , சிவவாத்தியங்கள் முழங்க கும்ப மரியாதையுடனும் வரவேற்பு வழங்கப்பட உள்ளது.

நேரு விளையாட்டு அரங்கில் பிரதமர் , ஆளுநர் , முதலமைச்சர் முன்னிலையில் நடைபெறும் ' கேலோ இந்தியா ' விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் மல்லர் கம்பம் , சிலம்பம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இரவு 7.45 மணிக்கு கேலோ இந்தியா விழா முடிந்தபின் பல்லவன் சாலையைக் கடந்து அண்ணா சாலை வழியே பயணிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக சார்பில் சாலையோரங்களில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது . நாளை இரவு 8 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையை சென்றடையும் பிரதமர் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடைகிறார். நாளை மறுநாள் காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்றடையும் பிரதமர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு காலை 10.55 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை சென்றடைகிறார். பிற்பகல் 12.40 மணி வரை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பிரதமர் அர்ச்சகர்களிடம் பூஜைப் பொருட்களை பெற்றுக் கொண்டு சாலை வழியாக திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார் .

நாளை மறுநாள பிற்பகல் 12.55 மணிக்கு திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் பிற்பகல் 2 மணிக்கு ராமேஸ்வரம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தை சென்றடைகிறார். பின்னர் சாலை வழியே பயணிக்கும் பிரதமர் பிற்பகல் 2.10 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை சென்றடைகிறார். அங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று , தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ராமாயணம் இசைக்கப்படுவதையும் பார்வையிடுகிறார் பிரதமர். நாளை மறுநாள் இரவு ராமேஸ்வரத்திலேயே தங்கும் பிரதமர் 21 ம் தேதி காலை அரிச்சல் முனை கடற்கரைப் பகுதிக்கு செல்கிறார்.

மேலும் கோதண்டராமர் கோயிலில் தரிசனம் செய்யும் பிரதமர் ராமேஸ்வரத்தில் இருந்து பெற்ற புனித தீர்த்தத்துடன் பிற்பகல் 11.30 மணிக்கு ஹெலிகாப்டரில் மதுரை புறப்படுகிறார். தனது 3 நாள் தமிழக பயணத்தை நிறைவு செய்துகொண்டு நாளை மறுநாள் பிற்பகல் 12.35 மணிக்கு மதுரையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார் பிரதமர். அயோத்தியில் 22 ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற உள்ள நிலையில் ராமாயணத்துடன் தொடர்புடைய புனிதத் தலமான ராமேஸ்வரத்தில் இருந்து பிரதமர் கலசத்தில் எடுத்து செல்லும் புனித தீர்த்தத்தால் ராமர் சிலை அபிசேகம் செய்யப்பட உள்ளது.

Tags:    

Similar News