பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை - டிஐஜி ஆய்வு
பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து நெல்லை டிஐஜி பிரவேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
நாளை 30- ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் ஒன்றாம் தேதி வரை மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபடுகிறார். இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமான மூலமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 30 ஆம் தேதி மாலை 3 55 மணிக்கு வருகிறார். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்வையிடுகிறார். அங்குள்ள ஸ்ரீபாதம் மண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே பதிந்துள்ள பகவதி அம்மன் கால் பாத தடத்தில் வணங்குகிறார்.
பின்னர் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து மோடி தியானம் செய்கிறார். அவர் 30 ஆம் தேதி மாலையில் இருந்து ஜூன் 1ஆம் தேதி மாலை வரை அங்கே தங்கி இருநது தியானம் செய்கிறார். மூன்று நாட்கள் தியானத்திற்கு பின்பு ஜூன் 1ஆம் தேதி விவேகானந்தர் தியான மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார். பின்பு மாலை 3 15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார். பிரதமர் கன்னியாகுமரி வருவதை முன்னிட்டு குமரி மாவட்டம் இன்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. பிரதமர் வருகை முன்னிட்டு நேற்று காலை முதலே கன்னியாகுமரி அருகில் ஹெலிகாப்டர் ஒத்திகை நடத்தப்பட்டது. நெல்லை டிஐஜி பிரவேஷ் குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளதை அடுத்து வருகிற 30ஆம் தேதி முதல் மூன்று நாட்களும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.