பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-31 01:29 GMT

 அன்புமணி ராமதாஸ் 

 அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் இன்றையத் தேவை கருணை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல் ஆகியவை தான். அதை வலியுறுத்தும் திருநாள் தான் ஈஸ்டர் திருநாள் ஆகும். ஈஸ்டர் நாளில் பரிசளிக்கப்படும் முட்டைகளில் இனிப்புகளும், மிட்டாய்களும் நிறைந்திருக்கும்.

அவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை. மாறாக, சமூகத்திற்கு வழங்கப்படும் ஈஸ்டர் முட்டைகளில் அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை நிறைந்திருக்க வேண்டும். அது தான் ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும். இயேசுவின் உயிர்த்தெழுதல் நமக்கு சொல்லும் பாடங்கள் ஏராளம். உண்மையையும், நேர்மையையும், உழைப்பையும் வஞ்சகர்கள் நினைத்தால் சிலுவையில் அறையலாம். ஆனால், அவற்றை அதிக காலத்திற்கு அடைத்தோ, மறைத்தோ வைக்க முடியாது; அவை மிகவும் விரைவாக உயிர்த்தெழும் என்பது தான் ஈஸ்டர் திருநாள் சொல்லும் செய்தியாகும்.

தமிழ்நாட்டு மக்களாகிய நாம் இழந்த உரிமைகள், பெறத் தவறிய வெற்றிகள் ஆகியவற்றுக்கும் ஈஸ்டர் திருநாள் சொல்லும் செய்தி நிச்சயமாக பொருந்தும். அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும், தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் உயிர்த்தெழுந்த இந்த நாளில், உலகம் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு தேவையான அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவை தமிழ்நாட்டில் தழைக்கவும் பாடுபடுவதற்கு அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

Tags:    

Similar News