தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு
கேரள குண்டு வெடிப்பை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
By : King 24x7 Website
Update: 2023-10-30 06:36 GMT
கேரள மாநிலம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மத கூட்ட அரங்கில் ஏற்பட்ட குண்டுவெடிப்பை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்கள், தங்கும் விடுதிகளில் காவல்துறை பாதுகாப்பை அதிகப்படுத்தவும், வாகனங்களை சோதனை செய்யவும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 11 சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். தஞ்சை தெற்குஅலங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் மேற்கு காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையிலான காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது விடுதிகளில் தங்கி இருந்தவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள், அவர்களது ஆதார் அட்டை நகல் பெறப்பட்டுள்ளதா எனவும் வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தனர். மேலும் சந்தேகப்படும்படி யாராவது நடந்து கொண்டால் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவித்தனர். இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வாகன சோதனை நடைபெற்றது. கார், வேன், இருசக்கர வாகனங்களை தடுத்த நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். மேலும் கிறிஸ்தவ தேவாலயங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை பெரிய கோவிலில் வழக்கத்தை விட அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.