சென்னையில் வரும் 27, 28ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னையில் வரும் 27, 28ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும். இலங்கை மற்றும் தமிழக கடற்பகுதியை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். புயல் என்பது கடலின் வெப்ப நிலைமை பொறுத்து உருவாகும். டெல்டா மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும். இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு நாளை முதல் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. சென்னையில் 27 மற்றும் 28ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடற்பகுதிகளில் 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.