அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக தபால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.;
Update: 2023-12-12 12:31 GMT
கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி தஞ்சாவூர், கும்பகோணத்தில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழு தலைவர்கள் எம்.முருகேசன், ஏ.சூரிநாத் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணிநேர வேலை மற்றும் ஓய்வூதியம் உட்பட அனைத்து பலன்களையும் வழங்கவேண்டும், கமலேஷ்சந்திரா கமிட்டியின் அனைத்து சாதகமான பரிந்துரைகளையும் உடனடியாக நிறைவேற்றவேண்டும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ வசதிகள் வழங்கவேண்டும், வேலைப்பளு காரணம் காட்டி லெவல் 2 ஊதியம் வழங்காமல் லெவல் 1 ஊதியம் வழங்குவதை நிறுத்தவேண்டும். கிளை அஞ்சலகங்களுக்கு லேப்டாப், பிரிண்டர், அதிவேக இணைய சேவை உள்ளிட்ட வசதிகள் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். கும்பகோணம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் வளாகத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். கோட்ட தலைவர் கனகசபாபதி, சங்க ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கோரிக்களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த காலவரையற்ற போராட்டத்தால், தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் தபால் பட்டுவாடா முழுமையாக பாதிக்கப்பட்டது.