சாமியாக மாறிய பிரதமர் மோடி..? - இது எப்போ நடந்தது என கேட்கும் பாஜக தொண்டர்கள்..!

PM Modi: நெல்லையப்பர் சாமியாக பிரதமர் மோடியை சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

Update: 2024-02-27 06:55 GMT

நெல்லை வரும் பிரதமர் மோடி

PM Modi: நெல்லை மாவட்டத்திற்கு முதல் முறையாக வருகை தரும் பிரதமர் மோடியை நெல்லையப்பர் சாமியாக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பாஜகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் பணிகளில் மத்தியில் ஆளும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பாஜக கட்சி கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது. இதற்கிடையே ஒவ்வொரு பகுதிக்கும் சென்று என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்தார். அதன் இறுதி நாளில் பங்கேற்க வந்த பாஜக தலைவர் ஜேபி நட்டா திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். 

ஜேபி நட்டாவின் வருகையை தொடர்ந்து இன்று தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகிறார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெறும் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பிரதமர்  மோடி பங்கேற்கிறார். முதல்முறையாக நெல்லை மாவட்டத்திற்கு வரும் பிரதமரை பிரமாண்டமாக வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன. நெல்லையில் பாஜகவுக்கு இருக்கும் பலத்தை பிரதமரின் காட்டிக் கொள்ள ஆங்காங்கே வரவேற்பு பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்தவகையில் நெல்லை தெற்கு மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயதுரை பாண்டியன் சார்பில் பிரதமர் மோடிக்கு ஒட்டப்பட்ட போஸ்டர் கவனத்தை ஈரத்துள்ளது.  அந்த போஸ்டரில், “ எங்கள் நெல்லையப்பர் சாமியே வருக, வெல்க, வாழ்க” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியை நெல்லையப்பர் சாமிக்கு இணையாக வைத்து ஒட்டப்பட்ட போஸ்டர் நெல்லை மக்களுக்கு அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இருக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் தான் நெல்லையப்பர் கோவில். நெல்லையின் ஆன்மீக அடையாளமாக இருக்கும் நெல்லையப்பர் கோவிலுக்கு என தனி வரலாறு உள்ளது. புகழ் பெற்ற நெல்லையப்பர் சாமியை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு பாஜகவினர் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பாஜகவின் ஒரு அங்கமாக விளங்கும் இந்து முன்னணியினரையே அதிருப்தி அடைய செய்துள்ளது. 

இதுதொடர்பாக இந்து முன்னனி நெல்லை மாவட்ட பொது செயலாளர் பிரம்மநாயகம் வெளியிட்ட அறிக்கையில், “ பிரதமர் மோடியை "எங்கள் நெல்லையப்பர் சாமியே வருக" என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. நெல்லை மண்ணை பாதுகாத்து அருள்பாலித்து வரும் அருள்மிகு சுவாமி நெல்லையப்பரை நரேந்திர மோடியோடு ஒப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனை இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது இது போன்று கடவுளோடு ஒப்பிட்டு புகழாரங்களை பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் விரும்ப மாட்டார் என்பதை நாடறியும். பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை சித்தாந்தம் அறியாத நபர்களால் இது போன்ற செயல்கள் நடைபெறுவது வேதனைக்குரியது. எந்த அரசியல் கட்சியினர் இது போன்ற செயலில் ஈடுபட்டாலும் இந்துமுன்னணி பேரியக்கம் கண்டனம் தெரிவிக்கும்” என கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போது “கோ பேக் மோடி” என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகும். இந்த முறை நெல்லையப்பர் சுவாமி போஸ்டர் வைரலை ஏர்படுத்தியுள்ளது. இந்த போஸ்டருக்கு பாஜகவின் இந்து முன்னணி கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்திருப்பது நெல்லை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இன்று பிற்பகல் 2.06 மணிக்கு கோவை சூலூருக்கு வரும் பிரதமர்,  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் சென்றடைகிறார். பின்னர் மாதப்பூரில் நடைபெறும் ‘என் மண்... என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அவருக்காக தாமரை வடிவில் மேடை அமைக்கப்பட்டு, ஐந்து லட்சம் பேர் அமரக்கூடிய வகையில், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News