பிரதமர் மோடி வருகை - கன்னியாகுமரியில் பாதுகாப்பு தீவிரம்
பிரதமர் மோடி வருகையையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கும், சுற்றுலா பயணிகள் கடற்கரை செல்வதற்கும் , சுற்றுலா பயணிகளுக்கான படகு சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமாரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று முதல் மூன்று நாட்கள் தியானம் செய்கிறார். இதையொட்டி பிரதமர் மோடி இன்று மாலை 4 .35 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை ஹெலிபேடிலிருந்து மோடி நேராக பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்கிறார்.
பின்னர் கடலில் அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபத்திற்கு தனிப்படகில் செல்லும் மோடி அங்கு 45 மணி நேரம் சுவாமி விவேகானந்தர் தவமிருந்த பாறையில் பிரதமர் மோடி இன்றுமுதல் 3 நாட்கள் தியானத்தை தொடங்குகிறார். இதனை முன்னிட்டு தமிழக போலீசார் மட்டுமின்றி மத்திய பாதுகாப்பு படையினரும் குமரிக்கு வந்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் கடந்த இரு நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், பிரதமரின் கன்னியாகுமரி வருகையையொட்டி 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவும், சுற்றுலா பயணிகள் கடற்கரை செல்லவும், சுற்றுலா பயணிகளுக்கான படகு சேவையும் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டன. மேலும் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.