சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பனப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2023-12-27 00:56 GMT

சாலை மறியல்

 சென்னை - பெங்களூர் தேசிய அதிவிரைவு சாலை பணிக்காக ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகவலம், உளியநல்லூர்  உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரிகளில் அதிக அளவு மண் எடுக்கப்பட்டு வருகிறது.  மேலும் அதிக லோடு ஏற்றிக்கொண்டு லாரிகள் செல்வதால் கிராம தார் சாலைகள் அனைத்தும் மண் சாலைகளாக மாறிப் போனது . இதனால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சாலைகள்  உள்ளது.  மேலும் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.  

இந்நிலையில் சேதமடைந்த கிராம சாலைகளை சீரமைக்க கோரி உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள், கிராம பொதுமக்கள் இணைந்து பனப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில்  நெமிலி ஒன்றிய குழு துணை தலைவர் தீனதயாளன், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் சரவணன் மற்றும் பாமகவினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து திடீரென பனப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்த சாலை மறியலால் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது மறியலில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் . சாலை மறியலால் வேலூர் -  அரக்கோணம் சாலையில் இரண்டு  மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News