புதுக்கோட்டை மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றுள்ள ராமேஸ்வரம் பகுதி மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்காத மத்திய,மாநில அரசுகளை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மின்விசை படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-02-20 03:22 GMT

வேலை நிறுத்தம் 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதி விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பாக கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்டு கொண்டு வரக் கோரி தமிழகத்தில் உள்ள மீனவ சங்கங்கள் சார்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மூன்று மீனவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்த செய்தி அறிந்த தமிழக மீனவர்கள் பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் ஏற்படுத்தியது.

இதனை கண்டிக்கும் விதமாக கடந்த இரண்டு தினங்களாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கோட்டைப்பட்டினம்,ஜெகதாபட்டினம் பகுதி மீனவர்களும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்களின் இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் பல லட்சம் மதிப்பிடைய மீன், நண்டு,இறால் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவதும் அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதனை கண்காணித்து மீனவர்களை காக்க வேண்டிய மத்திய,மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் வருத்தத்தக்க செயல் என்று வேதனைதெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News