கவாச் குறித்த கனிமொழி கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதில்!
தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) அமைப்பு கவாச் நிறுவுவதற்கு ரூ.1,112.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; தி.மு.க எம்.பி.,க்கள் கனிமொழி கருணாநிதி எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.
மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. ஜூலை 23ஆம் தேதி 2024-25 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று மக்களவையில் நாட்டில் கவாச் அமைப்பை நிறுவுவதற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்த விவரங்களை கனிமொழி எம்பி கோரி இருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கவாச் பணிகளுக்கு இதுவரை ஆயிரத்து 216 கோடியே 77 லட்ச ரூபாய் நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நடப்பு 2024-25 நிதி ஆண்டில் ஆயிரத்து 112 கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறினார்.