ராமநாதபுரம் : 500 டன் குண்டு மிளகாய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
ராமநாதபுரம் அருகே கமுதியில் இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட குண்டு மிளகாய் கடல் கடந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ள பாக்குவெட்டி, கீழவலசை, செங்கப்படை, ராமசாமிபட்டி. பாறைக்குளம் உள்ளிட்ட 15 கிராமங்களில் உள்ள சுமார் 500 விவசாயிகள் இயற்கை விவசாயம் மூலம் மிளகாய் சாகுபடி செய்து தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளனர்.
இந்த 15 கிராமங்களில் விளைவிக்கப்படும் இயற்கை வேளாண் உரங்களில் இருந்து பயிரிடப்படும் மிளகாய் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு கமுதியில் உள்ள குடோன்களில் குவிக்கப்பட்டு அதில் உள்ள சோடை வத்தல்கள் 100க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டு தரம் பிரிக்கப்பட்டு 20 கிலோ பேக்கிங் ஆக மாற்றப்பட்டு தூத்துக்குடியில் உள்ள குளிரூட்டப்பட்ட குடோன்களில் பாதுகாக்கப்பட்டு இயற்கை விவசாயத்தால் விளைந்தது என தர சோதனை நிர்ணயம் செய்யப்பட்டு அமெரிக்கா, துபாய் மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு மிளகாய்களாகவும். மிளகாய் பொடிகளாகவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கமுதி தாலுகாவில் உள்ள மற்ற கிராமங்களில் செயற்கை உரங்களால் விளையும் மிளகாய் தற்போது 150 ரூபாய் விற்பனையாகிறது ஆனால் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் மிளகாய் ரூபாய் 190 முதல் 210 ரூபாய் வரை விலை போகிறது. எஸ்யுஎஸ் அக்ரி என்ற நிறுவனம் கமுதி பகுதியில் இயற்கை விளையும் விவசாயத்தால் மிளகாய்களை மட்டும் வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதில் கிடைக்கும் லாபத்திலும் பங்கு கொடுத்து இப்பகுதி மக்களை வளமடைய செய்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 10 டன் அளவிற்கு இயற்கை விவசாயம் மூலம் மிளகாய்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த நிலையில் இந்த ஆண்டு தற்போது வரை 400 டன் மிளகாய்கள் இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது என்ற தரத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு மாத காலத்தில் ஏறக்குறைய 100 முதல் 150 டன் மிளகாய்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதி அதிக வெப்பம் உள்ள பகுதி என்பதாலும் இதில் செயற்கை உரங்கள் பயன்படுத்தினால் மிளகாய்கள் தரம் குறைந்து இருப்பதால் இயற்கை விவசாயத்திற்கு மாறி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு விவசாயிகள் முன்னேறி உள்ளனர். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வரும் தமிழக அரசின் தூண்டுதலால் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 1200 டன்கள் இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்பட்ட மிளகாய்கள் வெளிநாட்டில் வியாபாரமாகி அந்நிய செலவாணியை ஈட்டியுள்ளது.