அரசியல் கட்சிகளுக்கு ராணிப்பேட்டை ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
அனுமதிபெற்ற பின்னரே அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தங்களது விளம்பரங்களை வெளியிட வேண்டும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
அனுமதிபெற்ற பின்னரே அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தங்களது விளம்பரங்களை வெளியிட வேண்டும் என ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள், வானொலி மற்றும் சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் செய்ய ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்புக் குழுவின் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும். அனுமதி பெறாமல் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்படும் அனைத்து விளம்பரங்களும் சுய விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட கட்டண செய்தியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.
எனவே விளம்பரம் வெளியிட விரும்பும் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் அல்லது முகவர்கள் விளம்பரம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் இணைப்புகளுடன் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, விளம்பரங்களை இரண்டு குறுந்தகடுகளில் நகல் எடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் 3 நாட்களுக்கு முன்னதாகவும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 7 நாட்களுக்கு முன்னதாகவும் இக்குழுவிடம் சமர்பிக்க வேண்டும். இக்குழுவின் தலைவராக மாவட்ட வருவாய் அலுவலர், உறுப்பினர்களாக வருவாய் கோட்டாட்சியர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மத்திய அரசின் தொலைத் தொடர்பு அலுவலர், மத்திய அரசு காட்சி நிறுவனப் பணியாளர், பொது நபர் அல்லது பத்திரிகையாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளம்பரங்களில் சாதி, மதம், சமுதாயம் தொடர்பான வாசகங்கள் இடம்பெறக் கூடாது. விளம்பரங்களுக்கான அனுமதி வழங்குவதும், நிராகரிப்பதும் ஊடக சான்றழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் இறுதி முடிவிற்கு உட்பட்டதாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.