ரூ.41.98 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு முடிவுற்ற கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
3 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.41.98 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு முடிவுற்ற கூட்டுக் குடிநீர் திட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம், சோளிங்கர் மற்றும் அரக்கோணம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.41.98 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு முடிவுற்ற கூட்டுக் குடிநீர் திட்டத்தினைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பாலாற்றினை நீர் ஆதாரமாக கொண்டு காவேரிப்பாக்கம், சோளிங்கர் மற்றும் அரக்கோணம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் (செம்பேடு உட்பட 11 ஊராட்சிகள் மற்றும் 88 ஊரக குடியிருப்புகளுக்கு) ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.41.98 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் நிறைவடைந்து குடிநீர் விநியோகிக்கும் பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக தொடங்கி வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து, பாணாவரம் அடுத்த பிள்ளையார் குப்பம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று குத்துவிளக்கேற்றினார்.
இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தின்படி சூரை, நந்திமங்கலம், ஆயல், பாணாவரம், செம்பேடு, மின்னல், வேடல், குன்னத்தூர், தப்பூர், பழையப்பாளையம், போளிப்பாக்கம் ஆகிய 11 ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீர் சேகரிக்கப்படுகிறது. பின்னர், நீரேற்று குழாய்கள் வழியே 27 மின் இறைப்பான் மூலம் ஏற்கெனவே உபயோகத்தில் உள்ள ( 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு முதல் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட) 108 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலமாக 54 ஆயிரத்து 711 பேர் பயன்பெறுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரூ.47.58 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் இதேபோல், சோளிங்கர் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.47.58 கோடி மதிப்பீட்டில் 1 முதல் 27 வார்டுகளில் குடிநீர் அபிவிருத்தி பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பணிகள் குறித்த காலத்தில், தரமாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதன்மை பொறியாளர் சண்முகநாதன், கண்காணிப்பு பொறியாளர் பற்குணன், உதவி செயற்பொறியாளர்கள் குமரவேல், உதவி பொறியாளர் ஜெயபிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.