ராணிப்பேட்டைக்கு வரும் அரசு உறுதிமொழி குழு..!
வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையிலான 11 குழு உறுப்பினர்களை கொண்ட அரசு உறுதிமொழி ஆய்வு பயணம் மேற்கொள்ள உள்ளது.;
அரசு உறுதிமொழி நாள் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு நாளை முன்னிட்டு 11 உறுப்பினர்களை கொண்ட குழு ஆய்வு பயணம் மேற்கொள்ள உள்ளது. இவர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்ய வருகை தர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023-24ம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழி குழு தலைவர் மற்றும் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையிலான 11 குழு உறுப்பினர்களை கொண்ட அரசு உறுதிமொழி ஆய்வு பயணம் மேற்கொள்ள உள்ளது.
இக்குழுவின் தலைவர் மற்றும் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ குழு உறுப்பினர்கள் பட்டுக்கோட்டை அண்ணாதுரை எம்.எல்.ஏ சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆர். அருள், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர். மனோகரன், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகிய 11குழு உறுப்பினர்கள் இந்த ஆய்வு பயணத்தில் கலந்து கொள்கின்றனர்.
சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு ஏற்கனவே நிலுவையில் இருந்த உறுதிமொழிகள் சட்டமன்ற பேரவையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட உறுதிமொழிகளின் தற்போதைய நிலை குறித்து துறை சார்ந்த அலுவலர் உடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக காலையில் இருந்து பிற்பகல் வரை சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவில் அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இக்குழு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரடி கள ஆய்வு செய்து பார்வையிட உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிற்பகலில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒவ்வொரு உறுதிமொழி மனுக்களின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விரிவாக ஆய்வு செய்ய உள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் மனுக்களை வழங்கலாம்.
எனவே பொதுமக்கள் பொதுவான பிரச்சனைகள் குறித்து சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுவின் முன்னர் மனுக்களாக வழங்கிடலாம்” என ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.