கந்துவட்டி கொடுமையால் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை
கோவில்பட்டியில் கந்துவட்டி கொடுமையால் ரியல் எஸ்டேட் பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமைச்சர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த ஆறுமுக பாண்டி என்பவர் கந்து வட்டி கொடுமை காரணமாக கடந்த 25 ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார். கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆறுமுக பாண்டி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி கலந்து கொள்ள வந்த அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோரிடம் மனுகொடுக்க வந்த உயிரிழந்த ஆறுமுகப்பாண்டி மனைவி சித்ரா, அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்கள் வந்து இருந்தனர்.அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க விடமாட்டோம் என்று காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தனது கணவர் உயிரிழந்து விட்டதாகவும், இப்போது அதற்கு காரணமான கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கமால், அமைச்சர், மாவட்ட ஆட்சியரை சந்திக்க விடமால் தடுப்பது ஏன்? தாலிக்கு தங்கம் கொடுக்க வரும் அமைச்சரிடம்... என் தாலியை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுக்க விடுங்க என்று ஆறுமுகப் பாண்டி மனைவி சித்ரா கண்ணிர் விட்டு கதறி அழுத பின்னர் அரசு நிகழ்ச்சி நடக்கும் தனியார் திருமண மண்டபத்திற்குள் அனுமதித்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.