சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலுக்குள்ளாகும் தேயிலை செடிகள்!

குந்தா பகுதியில் போதிய மழை இல்லாததால் சிவப்பு சிவந்தி நோய் தாக்கி தேயிலை செடிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-12 12:35 GMT

தேயிலை செடி

நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. தேயிலை விவசாயத்தை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மறைமுகமாக 2 லட்சம் பேர் பயன் பெறுகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு இருக்கும்.

அப்போது தேயிலை செடிகள் கருகி மகசூல் பாதிக்கப்படும். அதன்பின்னர் கோடை மழை பெய்யும்போது மீண்டும் தேயிலை செடிகளில் மகசூல் பிடிக்கும். இந்த ஆண்டு கோடை மழை தாமதமாகியுள்ளது. இதன் காரணமாக ஒரு சில தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இதனால் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பகல் நேரத்தில் கடும் வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலையால், தோட்டங்களில் ஈரப்பதம் வெகுவாக குறைந்து வருகிறது.

இதன் காரணமாக குந்நா சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் செடிகளை சிவப்பு சிலந்தி நோய் அதிகளவில் தாக்கி உள்ளது. தேயிலை செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்து வருதுடன், பச்சை தேயிலை மகசூல் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள் வழங்கும் பச்சை தேயிலை வழக்கத்தைவிட குறைந்து உள்ளது. இதையடுத்து விவசாயிகள் தங்களது தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகளுக்கு வெட்டாசெல் மற்றும் சல்பர் ஆகியவை கலந்த கலவையை தண்ணீருடன் சேர்த்து ஸ்பிரிங்ளர் மூலம் தெளித்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "மருந்து தெளித்தாலும், மழை பெய்து வறட்சியின் தாக்கம் குறைந்தால் மட்டுமே, நோயின் தாக்கம் குறைந்து, பச்சை தேயிலை மகசூல் அதிகரிக்கும். சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரிக்க தொடங்கி விட்டது.

இந்த நோய் தாக்கிய செடிகளில் பச்சை தேயிலையை பறிக்கும்போது தொழிலாளர்களுக்கும் கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மருந்து தெளித்தாலும் நோய் மற்ற செடிகளுக்கு பரவி விடுகிறது. இதற்கு ஒரே தீர்வு கோடை மழை பெய்வது மட்டுமே. மழையை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். மழை பெய்தால் மட்டுமே பச்சை தேயிலை மகசூல் அதிகரிக்கும்,"என்றனர். .

Tags:    

Similar News