மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1.70 லட்சம் கன அடி நீர் திறப்பு
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அனைத்தும் நிரம்பி காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்னர் வறண்டு காணப்பட்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,25,500 கன அடியில் இருந்து 1,70,500 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சம் கன அடிக்கும் மேல் காவிரி ஆற்றில் வந்து கொண்டுள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.