சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-11 15:57 GMT
சுகாதார ஆய்வாளர் சங்க கூட்டம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பொது சுகாதாரத் துறையில், சுகாதார ஆய்வாளர்களுக்கு தாமதப்படுத்தாமல் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் நூற்றாண்டு துவக்க நாள், சுகாதார ஆய்வாளர்கள் தினம் மற்றும்  மாநில செயற்குழுக் கூட்டம் என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூரில் நடைபெற்றது.

விழாவுக்கு வந்தவர்களை தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சா.சுதாகர் வரவேற்றார். மாநிலத் தலைவர் சோ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் தீ.பத்மநாபராவ் விளக்க உரையாற்றினார் . இதில் சிறப்பு விருந்தினர்களாக திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஓய்வு பெற்ற பொது சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் கே.மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர். நிறைவாக மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.வைத்தியநாதன் நன்றி தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: "ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் நிலை 2 க்கான பணியிடங்கள் காலியாக உள்ளதை உடன் நிரப்ப வேண்டும். தமிழகத்தில் மக்கள் தொகை 8 கோடிக்கும் மேலாக இருக்கும் நிலையில், அரசின் பொது சுகாதாரத் துறையில் நிரந்தர பணியில் இருக்கும் சுகாதார ஆய்வாளர்கள் எண்ணிக்கை 2500-க்கும் குறைவாக உள்ளது. எனவே இதனை ஓரளவு சரி செய்யும் விதமாக 2,715 புதிய சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிட ஒப்புதலுக்கான கோப்புக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் இருப்பது போல், சுகாதார ஆய்வாளர்களுக்கு சுகாதார ஆய்வாளர் குழுமம் அமைக்கப்பட வேண்டும். மருத்துவமனை பணியாளர்களுக்கான நிலையப் பணியாளர்கள் பாதுகாப்பு சட்டம் இருப்பது போல், களப்பணியாளர்களுக்கும் களப்பணியாளர்கள் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும். பொது சுகாதாரத் துறையில் பதவி உயர்வுகள் என்பது தாமதிக்கப்படுகிறது. எனவே உரிய காலத்தில் தாமதப்படுத்தாமல் பதவி உயர்வு வழங்க வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News