மழை சேதங்களை மதிப்பீடு செய்ய விசாரணை கமிஷன் - மஜத கோரிக்கை

தென் மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட சேதாரங்களை மதிப்பீடு செய்ய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-12-26 06:51 GMT

வெள்ள பாதிப்பு 

தமிழ்நாடு மதச்சார்பற்ற ஜனதாதள மாநில துணைத்தலைவர் எம்.சொக்கலிங்கம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: "தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழையால், விவசாய பயிர்கள், உப்பளங்கள், மீன்பிடி படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் வீடுகள், வீட்டு உபயோக பொருட்கள், மின் சாதனங்கள், மோட்டார்கள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முதலிய அத்தியாவசிய சொத்துகளை ஏராளமானவர்கள் இழந்துள்ளனர்.        

   அதுபோல் தனியாக தொழில் செய்து வரும் வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், மெக்கானிக்குகள், பிளம்பர்கள் எலக்ட்ரிசியன்கள், கட்டிட தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள் என அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, செய்வதறியாது குடும்பத்துடன் கஷ்டப்படுகிறார்கள்.      இதனால், பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நேரடி சாட்சியாகவும் அளவீடு  மூலமாக ஆதாரத்துடன் தெரிவிக்க அனுமதித்து, அதன் அடிப்படையில் இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்ய வேண்டியது, நீதியின் பொருட்டு அவசியமும், நியாயமுமாய் இருக்கிறது.    ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சரியான சேதாரங்களை கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் இழப்பீடு கிடைக்கும் வகையில், உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு, ஒரு விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும்." இவ்வாறு வக்கீல் எம்.சொக்கலிங்கம் மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News