தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 இடங்களில் வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம் 

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2024-02-22 11:30 GMT
தஞ்சை மாவட்டத்தில் 12 இடங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிகளை புறக்கணித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்களை நடத்துவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி கடந்த 13-ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-ஆவது கட்டமாக வியாழக்கிழமை முதல் அனைத்து பணிகளையும் புறக்கணிப்பு செய்து அலுவலக வாயிலில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியர் அலுவலகம், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் என 12 இடங்களில் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு வட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுபபினர்கள் மதியழகன், நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்பு திட்ட ஊழியர்கள். வட்ட வழங்கல் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் 40 பேர் கலந்துகொண்டனர்.  இதே போல் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற போராடங்களில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News