இந்தியா கூட்டணிக்கு ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் ஆதரவு
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.;
செய்தியாளர்கள் சந்திப்பு
திருச்சியில் நடைபெற்ற தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, தலைமை வகித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதியிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளோம். 40 தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாகச் சென்று கூட்டணிக் கட்சியின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்படும் என்றாா்.
தமிழகத்தைப் போன்று மத்திய அரசும் வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க சட்டம் இயற்ற வேண்டும். வங்கிகளில் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்தில், சங்கத்தின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.