ஆர்.எம்.வீரப்பன் மறைவு - வைகோ இரங்கல்
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில். ஆர்.எம்.வீ. என்று நம் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் தன் 97 ஆவது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்திய செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய ஆர்.எம்.வீ., தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், ஜானகி எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகிய தலைவர்களுடன் பழகி திராவிட இயக்கம் வளர தொண்டாற்றினார்.
செட்டிநாட்டுச் சீமையான காரைக்குடியில், திராவிட இயக்கம் வளர்த்த இராம.சுப்பையா அவர்கள், ஆர்.எம்.வீ. அவர்களை நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரது நாடகக் குழுவிலும் ஆர்.எம்.வீ. பணியாற்றினார். தந்தை பெரியார் அவர்கள் காரைக்குடி பகுதிக்கு வருகை தந்தபோது, இராம.சுப்பையா அவர்களுடன் இணைந்து ஆர்.எம்.வீ. அவர்கள் பெரியாருக்கு உதவியாகப் பணியாற்றினார்.
ஈரோட்டிலும் பெரியார் இல்லத்தில் தங்கி இயக்கப் பணியில் ஈடுபட்டார். கே.ஆர்.இராமசாமி அவர்களின் கிருஷ்ண நாடக சபா குழுவிலும், டி.கே.சண்மும் அவர்களின் நாடகக் குழுவிலும் ஆர்.எம்.வீ. அவர்கள் பணியாற்றினார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நாடகக் குழுவிலும், எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் எனும் நிறுவனத்திலும் ஆர்.எம்.வீ. அவர்கள் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரியவராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அவர்களின் தாயார் சத்யா அம்மையார் பெயரில், சத்யா மூவிஸ் என்ற நிறுவனத்தையும் ஆர்.எம்.வீ. தொடங்கி, திரைப்படங்களைத் தயாரித்தார்.
சத்யா மூவிஸ் நிறுவனத்தில் தெய்வத் தாய் என்ற திரைப்படத்தில் கே.பாலச்சந்தர் அவர்கள் திரைக்கதை வசனம் எழுதி பின்னர் திரைத்துறையில் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நாடோடி மன்னன் திரைப்படம் வெற்றி விழா கண்டபோது, அதனை விழா எடுத்துக் கொண்டாடினார் ஆர்.எம்.வீ. அறிஞர் அண்ணா அவர்களை அந்த விழாவுக்கு அழைத்து, திரைப்படம் வெற்றிபெற பாடுபட்ட 150 பேருக்கு முக்கால் பவுன் தங்க மோதிரத்தை அண்ணா அவர்களால் அணிவிக்கச் செய்தார். அப்பொழுது அவருக்கு அண்ணா அணிவித்த மோதிரத்தை இறுதி வரை உயிராகப் போற்றியவர் ஆர்.எம்.வீ. திருப்பரங்குன்றத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ராஜம்மாள் அவர்களை சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார்
ஆர்.எம்.வீ. அந்தத் திருமண விழாவில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். காவல்காரன், நடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், ரிக்ஷாகாரன், தெய்வத் தாய் என ஆர்.எம்.வீ. தயாரித்த அத்தனை திரைப்படங்களும் எம்.ஜி.ஆர். அவர்களை திரை உலகச் சக்கரவர்த்தியாக உயர்த்திக் காட்டியது. ஆர்.எம்.வீ. அவர்கள் வயது முதிர்ந்த நிலையில், ஆழ்வார்கள் மையம் என்ற அமைப்பினைத் தொடங்கி, ஆன்மிகத் துறையிலும், இலக்கியத் துறையிலும் இயன்ற அளவு பணி செய்து வந்தார். இத்தகைய பெருமைகளுக்குரிய அண்ணன் ஆர்.எம்.வீ. அவர்களின் இழப்பு திரைப்படத் துறைக்கும், திராவிட இயக்கத்திற்கும் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.