ஆரல்வாய்மொழியில் அரசு பெண் அதிகாரி வீட்டில் கொள்ளை
ஆரல்வாய்மொழியில் அரசு பெண் அதிகாரி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சிதம்பர புரம் பகுதி சேர்ந்தவர் மோகன்தாஸ் காந்தி (61). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி பாக்கியம் (58) மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாவட்ட பதிவாளராக அங்கேயே தங்கி பணியாற்றி வருகிறார். நேற்று மோகன்தாஸ் காந்தி மயிலாடுதுறையில் உள்ள மனைவியை பார்க்க சென்று உள்ளார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் வீட்டு வேலை செய்யும் பெண் வீட்டை சுத்தம் செய்ய வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முன்புற கதவு திறந்து கிடந்தது. இது தொடர்பாக செண்பகராமன் புதூர் ஊராட்சி தலைவர் கல்யாண சுந்தரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மோகன்தாஸ் காந்தி இல்லாததை அறிந்த கொள்ளையர்கள் பீரோக்களை உடைத்து நகை, பணங்களை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளை மதிப்பு மோகன்தாஸ் காந்தி மயிலாடுதுறையிலிருந்து வந்த பின்புதான் தெரிய வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த போது, நள்ளிரவில் பைக்கில் வந்த 2 நபர்கள் வீட்டை நோட்டம் விட்டு, வீட்டில் நுழையும் காட்சிகள் பதிவாகியுள்ளன.