அம்மா உணவகங்களுக்கு ரூ.21 கோடி நிதி - முதலமைச்சர் உத்தரவு
அம்மா உணவகங்களை மேம்படுத்திட ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஆய்வு செய்தார். அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவரிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். ஊழியர்களிடம் உணவு தயாரிப்பு முறைகள், உணவின் தரம் குறித்தும் அவர் கேட்டறிந்தார
பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும், 7 அரசு மருத்துவமனைகளிலும் சென்ற ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட 388 அம்மாஉணவகங்கள் தற்போது தொடர்ந்து செயல்பட்டு ஏழை எளியோருக்கு பயனளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகின்றது.
இந்நிலையில் சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்காக ரூ.21 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் 14 கோடி ரூபாய் செலவில் இந்த உணவகங்களை புனரமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்கள். தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுசெய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.