டிக்கெட் இன்றி பயணித்த ரயில் பயணிகளிடம் ரூ.1.93 கோடி வசூல்
கடந்த மாதம் சேலம் கோட்டத்தில் ரயிலில் டிக்கெட் இன்றி பயணித்த பயணிகளிடம் ரூ.1.93 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் நபர்களை டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள். இதில் சேலம் ரயில்வே கோட்டத்தில் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா உத்தரவின் பேரில் தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சேலம் கோட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனைகளை நடத்தினர்.
இதன் மூலம் டிக்கெட் இன்றி பயணித்த 14 ஆயிரத்து 829 பேருக்கு ரூ.1 கோடியே 30 லட்சத்து 812 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல முன்பதிவில்லா பெட்டியில் டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியலும், 2-ம் வகுப்பு முன்பதிவு டிக்கெட் எடுத்துக்கொண்டு ஏசி பெட்டிகளிலும் முறைகேடாக பயணித்த 11 ஆயிரத்து 88 பேரிடம் இருந்து ரூ.63 லட்சத்து 64 ஆயிரத்து 889 அபராதம் வசூலிக்கப்பட்டது. \
ரயில்களில் விதிமுறைகளை மீறி அதிக லக்கேஜ் எடுத்து சென்றதாக 31 பயணிகளுக்கு ரூ.23ஆயிரத்து 477 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக கடந்த மாதத்தில் மட்டும் டிக்கெட் இன்றி பயணம் , முறைகேடான பயணம் அதிக லக்கேஜ் ஆகியவற்றிற்காக 25 ஆயிரத்து 948 பேரிடம் இருந்து 1 கோடியே 93 லட்சத்து 89 ஆயிரத்து 178 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.