வசமாக சிக்கிய சவுக்கு சங்கர் - கைது செய்து 5 பிரிவுகளில் வழக்கு !
காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாகவும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார்.
சமூகவலைதளங்களில் தொடர்ந்து, அரசியல் ரீதியாகவும் அரசு தொடர்பாகவும் தன் கருத்துகளை பதிவு செய்து வரும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர்சமீபத்தில் அவர் ஒரு யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.
அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும் குறிப்பாக பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்திருந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீஸார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் அவர் தேனி சென்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சைபர் கிரைம் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து தேனி சென்ற சைபர் கிரைம் காவல் துறையினர், அங்கு தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று அதிகாலை 3 மணி அளவில் கைது செய்தனர்.
இதனிடையே சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சிறிய விபத்துக்கு உள்ளானது. இதையடுத்து கோவை செல்லும் வழியில் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி அளிக்கப்பட்ட்டது. பின்னர் மாற்று வாகனம் மூலம் சவுக்கு சங்கரை போலீசார் கோவை அழைத்து சென்றனர்.
அதன்படி 293 (பி),509 மற்றும் 353 ipc r/w section 4, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் section 67 இன்பர்மேஷன் டெக்னாலஜி சட்டம் 2000 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செயப்யப்பட்டு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கோவை சைபர் க்ரைம் போலீஸ் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டமிட்டுள்ளதாகவும், விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.