குமரி சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை - அமைச்சர் மனோதங்கராஜ்
கன்னியாகுமரி மாவட்ட முக்கிய சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.
குமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் நேற்று பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் அலையிஸ் சிக்கி உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- லெமூர் கடற்கரையில் தனியார் பகுதியில் சென்றபோதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரண தொகையும் விரைவில் அறிவிக்க உள்ளார். குமரி மாவட்டத்தில் 72 கிலோமீட்டர் நீள கடற்கரை உள்ளது. இங்கு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் லைப் கார்டு மற்றும் போலீசார் கண்காணிப்பு என்பது சிரமமான விஷயம்.
எனினும் முக்கிய சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்காக மீனவர் குழுக்கள் அமைக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள். ஆனால் நமது மீனவர்கள் யார் சிக்கினாலும் உடனடியாக காப்பாற்றி வருகிறார்கள். வெளியூல் இருந்து வருபவர்கள் நீச்சல் தெரியும் என கடலில் இறங்கி விடுகிறார்கள். கடல் நீச்சல் அவர்களுக்கு தெரியாது உள்ளூர் மீனவர்கள் கூட சில நேரங்களில் கடல் நீச்சல் தெரிந்தும், விபத்தில் சிக்கியிருந்தனர். கடலில் சிக்கியவர்களை மீட்பதற்கு ஸ்கூபா மற்றும் கடல் நீச்சல் பயிற்சி பெற்ற லைப் கார்டல் மட்டுமே முடியும். நமது காவல்துறையினருக்கு முறையான பயிற்சி கிடையாது என்பதால் கடல் அலையில் சிக்கியவர்களை அவர்களால் மீட்பது சற்று சிரமமான காரியம். தீயணைப்பு படை வீரர்களுக்கு ஓரளவு பயிற்சி உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.