பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, மோடி அரசின் நிர்வாகத் திறனின்மை
பொதுமக்கள் வரிப்பணத்தில் அரசு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதன் அடிப்படை நோக்கமே பொதுமக்களுக்கு சேவையளிப்பது தான். அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளை லாபத்தில் புரள வைப்பதற்கல்ல. ஒரு அரசால் இது போன்ற நிறுவனங்களை முறையாக நிர்வகித்து பொதுமக்களுக்கு சேவையளிக்க வைக்க முடியவில்லையெனில், அது அரசின் தோல்வியையே காட்டுகிறது என அமைச்சர் மனோதங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :- 2014 தொடங்கி கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி 30-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று தீர்த்துள்ளார். இதில் எல்.ஐ.சி நிறுவனத்தின் 22 கோடி பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன. இது போல ஏர் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப்போரேஷன், இன்ஜினீயர்ஸ் இந்தியா லிமிடெட், பி.ஹெச்.இ.எல், எல்.ஐ.சி என இதுவரை பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் ரூ.4 லட்சம் கோடிக்கும் மேல் நிதியைத் திரட்டியுள்ளதாகத் கூறப்படுகிது.
பொதுமக்கள் வரிப்பணத்தில் அரசு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதன் அடிப்படை நோக்கமே பொதுமக்களுக்கு சேவையளிப்பது தான்; அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளை லாபத்தில் புரள வைப்பதற்கல்ல. ஒரு அரசால் இது போன்ற நிறுவனங்களை முறையாக நிர்வகித்து பொதுமக்களுக்கு சேவையளிக்க வைக்க முடியவில்லையெனில், அது அரசின் தோல்வியையே காட்டுகிறது. கடந்த 70 ஆண்டுகளில், இந்தியா நூற்றுக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியது. குறிப்பாக இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தனது 16 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மொத்தம் 33 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினார்
. லால் பகதூர் சாஸ்திரி ஒரே ஆண்டிற்குள் 5 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினார். நாட்டின் 3வது பிரதமராக இருந்த இந்திரா காந்தி 66 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். ராஜீவ் காந்தி 1984 முதல் 1989ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 16 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினார். 1989 முதல் 1990 வரை வெறும் ஓராண்டு மட்டும் பிரதமராக இருந்த ஜனதா தளம் கட்சித் தலைவர் வி.பி.சிங் 2 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினார். இந்தியாவில் புதிய தனியார்மய - தாராளமய உலகமயக் கொள்கையை அறிமுகப்படுத்திய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் கூட, 1991 முதல் 1996 வரையிலான காலத்தில் 14 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினாரே தவிர, விற்பனையில் இறங்கவில்லை. ஐ.கே.குஜ்ரால் 1997 முதல் 1998 வரை பிரதமராக இருந்த போது 3 பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கினார்.
இப்படி கிட்டத்தட்ட 180 பொதுத்துறை நிறுவனங்கள் முந்தய ஆட்சிகாலங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவை ஆட்சி செய்த எந்த பிரதமர்களும் பொதுத்துறை நிறுவனங்களை மோடி அளவிற்கு விற்றுத்தீர்க்க முடிவெடுக்கவில்லை. ஆனால், முதன்முறையாக 1998 முதல் 2004 வரை வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 7 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றார். தற்போதைய பிரதமர் மற்றவர்களுக்கு போட்டியாக அதிக எண்ணிக்கையில் விற்பதை ஒரு இலக்காக வைத்துள்ளார். இதனாலேயே, BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை உரிமம் வழங்குவது இழுத்தடிக்கப்பட்டது. மோடியின் நண்பர் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமும், தேர்தல் பாத்திரம் மூலம் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய ஏர்டெல் நிறுவனமும் இன்று மோனோபோலி நிறுவனங்களாக கோலோச்சுகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பெருமுதலாளிகளின் பாக்கெட்டுகளில் அடைத்துவிட்டு, பொது மக்களின் பணத்தில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது மோடி அரசுக்கு அம்பானி அதானி மீதுள்ள கரிசனையையும், பொதுத்துறை நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான நிர்வாகத் திறனின்மையையுமே காட்டுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.