செங்கம் அருகே கோர விபத்து - கலெக்டர், எஸ்.பி , எம்எல்ஏ ஆய்வு

செங்கம் அருகே விபத்து நடந்த இடத்தில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மீட்பு பணிகளை பணிகளை துரிதப்படுத்தினர்.

Update: 2023-10-24 05:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்து அந்தனூர் அருகேநேற்று இரவு காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி 7 பேர் உயிரிழந்த கோர விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், மு.பெ.கிரி. எம்எல்ஏ ஆகியோர் மீட்புபணியை துரிதப்படுத்தி விபத்து குறித்து ஆய்வு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கௌமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் உட்பட 11 பேர் ஆயுதபூஜை விடுமுறையை கழிக்க புதுச்சேரிக்கு டாடா சுமோ காரில் இன்ப சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து சொந்த ஊருக்கு நேற்று இரவு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் சுமார் 9:15 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம், மேல் செங்கம் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் கூட்டு சாலையில் கிருஷ்ணகிரி நோக்கி சென்ற டாடா சுமோ காரும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் டாடா சுமோவில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். இரண்டு பேர் செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த நான்கு பேருக்கு செங்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாராய், நாராயணன், விமல், சால், நிக்கால், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் காமராஜ், தேன்கணிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் மகன் புனித் குமார் (23) ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள். விபத்தில் படுகாயம் அடைந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுப்பான், கிருஷ்ணப்பா, மிசோஸ்மிர்மி, எஸ்டிராபண்குரோ ஆகிய நான்கு பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மேல் செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த 7 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆயுதபூஜை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க சுற்றுலா சென்று விட்டு திரும்பும் போது நடந்த கோர விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அவர்கள் பணியாற்றும் கௌமங்கலம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இதே பகுதியில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு பெங்களூருக்கு திருப்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சம்பவத்தின் சோக வடு ஆறாத நிலையில் நேற்று நடந்த விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News