தாமிரபரணியில் கழிவுநீர் : அறிக்கை சமர்பிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு

தாமிரபரணியில் எங்கெங்கு சாக்கடை கலக்கிறது என்று அறிக்கை அளிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Update: 2024-03-14 07:31 GMT

தாமிரபரணி ஆறு 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் நெல்லை தூத்துக்குடி மாவட்டம் முக்கிய நீர் ஆதாரமாக தாமிரபரணி ஆறு உள்ளது. திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா புஷ்கரம் விழா நடைபெறுகிறது.

2018 அக்டோபரில் மகா புஷ்கரம் நடந்தது. அந்த சமயத்தில் தாமிரபரணி மிகவும்மோசமான நிலையில் இருந்தது. தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள் படித்துறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்குமாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கினை இவர் சார்பில் வழக்கறிஞர் டாக்டர் அழகு மணி நடத்தினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் பி.புகழேந்தி ஆகியோர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில் தாமிரபரணி ஆற்றில் அவர்கள் நேரில் கள ஆய்வு செய்ய வேண்டும். ஆற்றில் எங்கெல்லாம் கழிவுநீர் கலக்கிறது இதை தடுப்பது எப்படி என்பது குறித்து அறிக்கையளிக்க வேண்டும் என்றும், அறநிலையத்துறை கமிஷனர் தரப்பில் எங்கெல்லாம் பழமையான மண்டபங்கள் உள்ளன. அவற்றை புதுப்பிக்க முடியுமா அதற்கான சாத்திய கூறுகள் என்ன என்பது குறித்து அறிக்கையளிக்க வேண்டும் எனவும் இதே போல் படித்துறைகளை புதுப்பிக்க முடியுமா? அதன் சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்து நெல்லை மற்றும் தாமிரபரணி கரையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தரப்பில் அறிக்கையளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 26க்கு தள்ளி வைத்தனர். இந்த உத்தரவு தாமிரபரணி நதி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. விரைவில் தாமிரபரணி சுத்தமான நதியாக , பாரம்பரிய மிக்க நதியாக காப்பாற்றப்படும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News