அயோத்தியில் ஸ்ரீராம் லாலா சிலை பிரதிஷ்டை: தருமபுர ஆதீனம் அருளாசி
அயோத்தியில் ஸ்ரீராம் லாலா சிலை பிரதிஷ்டை நடைபெற உள்ளதையொட்டி மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் அருளாசி வழங்கி உள்ளார்.
ஸ்ரீராம்லாலா சிலை திங்கள்கிழமை பிரதிஷ்டை தருமை ஆதீனம் அருளாசி தருமை ஆதீனம் 27வது சந்நிதானம் மாசிலாமணி தேசிக சுவாமிகள் விடுத்துள்ள அருளாசியில் அயோத்தியில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது 500 ஆண்டுகால வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கக்கூடிய ஒரு வரலாற்று நிகழ்வு. ராமாயண தொடர்பு தமிழகத்தின் பல தலங்களில் நாயன்மார்கள், அருளாளர்களால் பாடப் பெற்றிருக்கிறது.
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், திருமுறை, சாஸ்திரம் இவைகள் இந்துக்களின் எல்லைக் கோடுகள். நமக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் இந்த நூல்களில் இருந்துதான் நாம் தீர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் ராமாயணம், மகாபாரதம் இதிகாசமாக போற்றப்படுகிறது. இந்த வரலாற்று சம்பவங்கள் நடைபெற்ற பதிவுகள் பல இருக்கிறது.
அவற்றுள் நமது ஆதீனத்துக்கு உள்பட்ட வைத்தீஸ்வரன்கோவில் மிக முக்கியமான தலமாக விளங்குகிறது. ராமர், லட்சுமணன், சம்பாயு, சடாயு ஆகியோர் வழிபட்ட இத்தலத்தில், சம்பாயு, சடாயுக்கு திதிகொடுத்த பிண்டமும் இன்றும் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் 1,400 ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிகம் முழுவதுமே ராமாயணத்தை பற்றி பாடியிருக்கிறார்.
அதேபோன்று ராமேஸ்வரம் தலத்திலும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவருமே அத்தலத்தை போற்றி பதிகமும் பாடி இருக்கிறார்கள்;. நம்முடைய குமரகுருபரும் வரலாற்று சிறப்பு மிக்க ராமர் வழிபாடு குறித்து பிள்ளைத்தமிழில் பாடியிருக்கிறார். அயோத்தில் ராமர் கோயில் நீதிமன்ற தீர்ப்பின்படி தொல்லியல்துறையின் கள ஆய்வின்படியும் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் அவரது ஆட்சிக்காலத்தில் செம்மையாக செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
நாம் செய்த தவம் ராமாயணம் நம்முடைய நாட்டிற்கு கிடைத்தது. கம்பன் பிறந்த இந்த தமிழகத்தில் நம்முடைய ஆதீனம் சார்பில் தம்பிரான் சுவாமி ராமர் கோயில் விழாவில் கலந்துகொள்ள செய்திருக்கிறோம். தலைக்காவிரி யாத்திரை சென்றபோது தலைக்காவிரியில் இருந்து ராமர் கோயிலுக்கு தீர்த்தம் அனுப்பியுள்ளோம். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து எல்லோரும் சென்று நடக்கக்கூடிய ராமர்கோயில் கும்பாபிஷேக விழா சீரோடும், சிறப்போடும் அமைய வாழ்த்துகிறோம். இதனை முன்னிலைப்படுத்திய, வரலாற்று சின்னத்தை நிறுவியிருக்கிற பாரத பிரதமருக்கு நமது நல்லாசிகள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.