வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரிய எஸ்.ஐ.,க்கு அபராதம்!

விசாரணைக்கு வந்தவர் இறந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2024-07-05 05:02 GMT

அபராதம்

தென்காசி மாவட்டம் கே.வி.நல்லூர் காவல் நிலையத்தில் சோமசுந்தரம் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1999-ம் ஆண்டில் தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது சிலர் மீது குற்ற வழக்கு பதிவு செய்தார். இதுகுறித்து சிலரிடம் விசாரித்தபோது, வின்சென்ட் என்பவர் மர்மமான முறையில் இறந்தார். அவரை போலீசார் அடித்து கொலை செய்ததாக அவரது மனைவி கிருஷ்ணம்மாள் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் அதிகாரி விசாரித்து, வின்சென்ட் இறப்புக்கு தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைத்து போலீசாரும் காரணம் என தூத்துக்குடி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். வின்சென்ட் இறந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு வருமாறு: தாளமுத்து காவல் நிலையத்தில் 1999-ம் ஆண்டில் விசாரணைக்கு வந்தவர் இறந்த வழக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்பும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் சரியான நீதியை வழங்காவிட்டால், நீதிமன்றத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டுவிடும். அரசு வக்கீல்கள், வக்கீல்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே நீதி வழங்க முடியும். வின்சென்ட் இறந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் போலீஸ்காரர்கள்தான். இந்த வழக்கை கடந்த மாதம் (ஜூன்) 25-ந் தேதி விசாரணைக்கு எடுத்ததில் தவறில்லை. இந்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்தில்தான் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்து உள்ளார். அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த தொகையை வின்சென்ட் வழக்கில் சாட்சி அளிப்பவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் பிரித்து வழங்க வேண்டும். இந்த வழக்கில் அரசு வக்கீலுக்கு உதவுவதற்காக சிறப்பு வக்கீலாக பி.ஆர்.எஸ்.ராமமூர்த்தி நியமிக்கப்படுகிறார். வின்சென்ட் இறந்த வழக்கை தூத்துக்குடி நீதிமன்றம்நாள்தோறும் விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News