ஸ்ரீவைகுண்டம் டூ தஞ்சாவூர் - தவிப்பை பகிர்ந்து கொண்ட இளைஞர்

அடுத்து என்ன நடக்கும் எனத் தெரியாமல், 40 மணி நேரத்திற்கு மேலாக தவித்த தவிப்பு, ரயிலில் இருந்த பயணிகளுக்கு மட்டுமே தெரியும். அதை வாழ்நாளில் மறக்க மாட்டோம்.

Update: 2023-12-21 04:21 GMT

வினோத்

ஸ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷனில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், 15 கி.மீ.,துாரம் தண்டவாளத்தில் நடந்து வந்து ஊருக்கு திரும்பிய அனுபவத்தை தஞ்சாவூர் இளைஞர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

தென்மாவட்டங்களான திருநெல்வேலி,துாத்துக்குடி பகுதிகளில் பெய்த கனமழையால், திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் சிக்னல் கோளாறு காரணமாக, ஸ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நிறுத்தப்பட்டது. இதில் இருந்த ஏராளமான பயணிகள் தவித்தனர். இதையடுத்து 40 மணி நேரத்திற்கும் மேலாக தவித்த பயணிகள் பலர் நேற்று முன்தினம் தண்டவாளம் வழியாக சுமார் 15 கி.மீ., துாரம் நடந்து வந்து ஊருக்கு சேர்ந்தனர்.

இதே போல தஞ்சாவூர் கருப்ஸ் நகரை சேர்ந்த வினோத்,34,. தனது அனுபவத்தை கூறியதாவது; கடந்த ஞாயிற்றுகிழமை திருச்செந்துாரில் சாமி தரிசனம் செய்து விட்டு, ஊருக்கு திரும்பிய போது, ரயில் இரவு 9:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷனில் நின்றது. அதன் பிறகு ரயில் புறப்படவில்லை. சுமார் 12:00 மணிக்கு ரயில் கேன்சல் என மெசேஜ் வந்தது. அங்கு வந்த சிலர், ஏரி உடைந்து விட்டது என கூறியது, பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் வேறு. ஒரு சிலரை அவர்கள் அழைத்து சென்றனர். அதன் பிறகு யாரும் வரவில்லை. திங்கள்கிழமை(18ம் தேதி) காலை புதுக்குடி என்ற ஊரில் மூதாட்டி ஒருவர் சுக்கு மல்லி காபி போட்டு எடுத்து வந்து ரயிலில் இருந்த குழந்தைகள் கொடுத்தார்.

பின்னர் அவர் மூலம், புதுக்குடி கிராமத்தினர் அங்கிருந்த காளியம்மன் கோவிலில் இருந்த பொருள்களை வைத்து சமைத்துக் கொடுத்தனர். பின்னர் நேற்றுமுன்தினம் அதிகாலை, திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர், செய்துங்கநல்லுார் என்ற இடத்தில், தனது காரை நிறுத்தி விட்டு, தண்டவாளத்திலேயே 15 கிலோ மீட்டர் நடந்து ஸ்ரீவைகுண்டம் வந்து தனது பெற்றோர், உறவினரை அழைத்து சென்றார். அவர் அளித்த நம்பிக்கையால், அரசு தரப்பிலிருந்தோ, ரயில்வே தரப்பிலிருந்தோ உணவு கொடுக்க முன்வர நிலையில், காலை 9:00 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, தண்டவாளத்திலேயே 15 கிலோ மீட்டரை நான்கு மணி நேரம் நடந்து, செய்துங்நல்லுாருக்கு வந்து அங்கிருந்து பஸ்சில் ஊருக்கு திரும்பினேன். என்னுடன் பலரும் வந்தனர். அடுத்து என்ன நடக்கும் எனத் தெரியாமல், 40 மணி நேரத்திற்கு மேலாக தவித்த தவிப்பு, ரயிலில் இருந்த பயணிகளுக்கு மட்டுமே தெரியும். அதை அவர்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News