நாம் தமிழர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கல்வீச்சு
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கல்லெறிந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கல்வீச்சில் கட்சி நிர்வாகி உள்ளிட்ட இருவரின் மண்டை உடைந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர் என்பவரை வேட்பாளராக அறிவித்து திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பம்பட்டு ஊராட்சியில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தண்டவாளம் அருகே இருந்து மர்ம நபர்கள் இருவர் திடீரென கற்களை வீசியதால் பரபரப்பு நிலவியது. இதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுபிஸ் மற்றும் பொதுமக்கள் இருவரின் தலையில் கல் பலமாக தாக்கி காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை உடனடியாக அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தையல் போடப்பட்டது. இதுகுறித்து ஆவடி மாநகரம், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கல்வீசிய மர்ம நபரை விரட்டிச் சென்ற போது இருசக்கர வாகனத்தில் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கூட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.