மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை குறைந்து போனதால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது .இதனை அடுத்து மேட்டூர் அணையிலிருந்து கடந்த 3-ம் தேதி மாலை 6 மணிக்கு டெல்டா பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 6,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
6,600 கன அடியாக இருந்த நீர் திறப்பு அடுத்த நாள் மாலை 5,600 கன அடியாகவும், நேற்று 4,600 கன அடியாகவும், குறைக்கப்பட்டது. இந்நிலையில் பாசன தேவை நிறைவடைந்ததை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 7 நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. கடந்த மூன்றாம் தேதி முதல் இன்று வரை பாசனத்திற்காக 3 டி.எம்.சி,நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.52 அடியாகவும்,நீர் இருப்பு 29.78 டி.எம்.சி,யாகவும் இருந்தது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.