காதலர்களை மிரட்டுவோர் மீது கடும் நடவடிக்கை - ரஞ்சன் குமார்

காதலர் தினத்தன்று தனி நபர் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்களை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும், காதலர்களை மிரட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-02-13 04:28 GMT

ரஞ்சன் குமார்

பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தின கொண்டாட்டம் உலகம் முழுவதும் நடப்பது சமீப காலமாக வழக்கமாகி இருக்கிறது. கலாச்சார சீர்கேட்டுக்கு இடம் தராமல் இருப்பதால் இந்தியாவில் காதலர் தின கொண்டாட்டத்துக்குத் தடை ஏதும் கிடையாது. ஆனால், காதலர் தினத்தன்று கோயில்களில் சென்று வழிபடும் காதலர்களை, இந்து அமைப்பினர் அடித்துத் துன்புறுத்துவது வாடிக்கையாகி இருக்கிறது. அதோடு, அன்றைய தினம் காதலர்களுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைப்பது போன்ற நிகழ்வுகள் கர்நாடகாவில் நடந்தன.

அதைப் பின்பற்றி தற்போது தமிழ்நாட்டிலும் இந்து அமைப்புகள் காதலர்களுக்கு எதிராக வன்முறைச் செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். பல இடங்களில் காதலர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். காதலிப்பது மிருகங்களிலும் உள்ளது. மனிதன் மட்டும் ஏன் அதை எதிர்க்கிறான். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் காதலர் தினத்தை எதிர்ப்பதற்குச் சாதியப் பின்னணியே முக்கிய காரணமாக இருக்கிறது. சாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்து கொண்டால் பழமையில் ஊறிப்போன இந்து அமைப்புகளுக்கு வலிக்கிறது. இதனால் தான் காதலர் தினத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள். மற்றபடி, அவர்கள் கூறுவது போல் கலாச்சார சீரழிவோ, பேரழிவோ எதுவும் இல்லை

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் பல மாநிலங்களில் உயர் சாதியினரால் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். இது கலாச்சார சீரழிவு இல்லையா? அதை விட்டு காதலர் தினத்தன்று தனிநபர் உரிமையை பறிக்க இவர்கள் யார்? அத்துமீறுபவர்களை தண்டிக்கக் காவல் துறை இருக்கிறது. காதலர்களை மட்டுமின்றி, காதலர் தினத்தையொட்டி பரிசுப் பொருட்கள், வாழ்த்து அட்டைகளை விற்பனை செய்யும் சிறு வணிகர்களைக் கூட இந்து அமைப்பினர் மிரட்டும் போக்கும் அதிகரித்துள்ளது. இந்த போக்கு இனியும் தொடர தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது. காதலர் தினத்தன்று தனி நபர் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்களை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். எனவே, காதலர்களை மிரட்டுவோர் மீதும், தாக்குதல் போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன். என எம்.பி.ரஞ்சன் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News