திருப்பூரில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; மாணவர்கள் அவசரமாக வெளியேற்றம்!!

திருப்பூரில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

Update: 2024-11-18 09:02 GMT

bomb threat

திருப்பூர் ராக்கியா பாளையம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். வார இறுதி விடுமுறை நாட்கள் முடிந்து வழக்கம் போல் இன்று காலை மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் இ.மெயில் மூலம் பள்ளி அலுவலக இ.மெயிலுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக நல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் நல்லூர் உதவி கமிஷனர் விஜய லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக பள்ளி மைதானத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தனர். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பள்ளி வகுப்பறைகள், அலுவலகங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்டவற்றை மெட்டல் டிடெக்டர், மோப்பர் நாய் மூலம் சோதனை மேற்கொண்டனர். பள்ளி வாகனங்களை வெளியே நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இருப்பினும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டனர். அவர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து சென்றனர். பள்ளிக்கு விடுமுறையும் விடப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யாரென்று தெரியவில்லை. இ.மெயில் முகவரியை வைத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இறங்கி உள்ளனர். அண்மைக்காலமாக தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகள் மற்றும் பொது இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது வழக்கமாகியுள்ளது. எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News