ஒன்றிய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்
வங்கி அதிகாரிகள் நியமனத் தேர்வு நேர்காணல் மூலம் நடைபெறும் என்ற அறிவிப்பை நிதியமைச்சர் திரும்பப்பெற வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுந்தியுள்ளார்.
வங்கி அதிகாரிகள் நியமனத் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு நீக்கம். நேர்காணல் மூலம் நடைபெறும் என்ற அறிவிப்பை ஒன்றிய நிதியமைச்சர் திரும்பப்பெற வேண்டும்.சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி அதிகாரிகள் நியமனங்களுக்கான முறைமையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் வெளிச் சந்தையில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு பேரதிர்ச்சி தருவதாக உள்ளது. இவ்வாண்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் முன் பணி அனுபவம் கட்டாயத் தகுதியாக இணைக்கப்பட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளில் 2 ஆண்டுகள் , தனியார் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 3 ஆண்டுகள் பணி ஆற்றி இருந்தால் மட்டுமே விண்ணப்பம் செய்ய இயலும் என்பதே அது. கடந்த கால பணி நியமனங்களில் இந்த நிபந்தனை கிடையாது. இது வேலைக்காக வெளியே காத்திருக்கும் புதிய தேர்வர்களுக்கு, முன் பணி அனுபவம் இல்லாத கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு நியமனத் தேர்வில் பங்கேற்க இயலாமல் வெளியே நிறுத்துவது ஆகும். தேர்வு முறைமையில் எழுத்துத் தேர்வு நீக்கப்பட்டுள்ளது. குழு விவாதம், நேர்காணல் வாயிலாகத் தேர்வு நடைபெறும் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்லா வங்கிகளிலும் நுழைவு நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் நடைமுறையில் உள்ளன.
இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் உள் பதவி உயர்வுகளுக்கே எழுத்துத் தேர்வுகள் உள்ள நிலையில் புதிய நியமனங்களுக்கு எழுத்துத் தேர்வு இல்லை என்ற முரண்பாடு வியப்பைத் தருகிறது. இத்தகைய மாற்றம் தமிழ்வழிக் கல்வி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய மாணவர்களுக்கு போட்டியில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கும். மேலும் எழுத்துத் தேர்வை நீக்கி குழு விவாதம், நேர்காணல் மட்டுமான முறைமை வெளிப்படைத் தன்மை அற்றதாகவே அமையும்.
இது தனி நபர் விருப்பு வெறுப்புகள், வெளித் தலையீடுகளுக்கு வழி வகுப்பதுமாகும். ஆகவே புதிய முறைமையை கைவிட்டு, முன் அனுபவ நிபந்தனையை நீக்கி, எழுத்துத் தேர்வுடன் கூடிய முந்தைய நியமன முறைமைக்குத் திரும்ப தலையீடுகளை செய்யுமாறு கோரி மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மற்றும் இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.