சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் உபகரணங்களுக்கு மானியம்
சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் உபகரணங்களுக்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பழனிராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆரணி, போளூர், செங்கம், சேத்துப்பட்டு, செய்யாறு, வந்தவாசி மற்றும் திருவண்ணா மலை கோட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இப்போது உள்ளதைவிட போல இருமடங்கு திறனுள்ள அதிக பட்சம் 7.5 குதிரைத் திறன் மின் பளு கொண்ட மோட்டார் பம்பு செட்டுகளுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் உபகரணங்கள் மானியத்துடன் வழங்கிட தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுமைக்கும் 5 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் உபகரணங்கள் மானியத்துடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகளுக்கு ஏற்படும் செலவினத்தில் 60 சதவீதம் மத்திய- மாநில அரசின் மானியமாகவும், 30 சதவீதம் அரசு வங்கிகளின் நிதியுதவியுடனும், 10 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்புடனும் அமைக்க உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளது.
எனவே இந்த திட்டத்தில் பயன்பெற ஏற்கனவே 7.5 குதிரைத் திறன் மின் இணைப்பு பெற்று உள்ள விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.