திருச்சி கலைஞர் அறிவாலயம் முன்பு ஆசிரியர்கள் திடீர் முற்றுகை
திருச்சி கலைஞர் அறிவாலயம் முன்பு இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் திடீர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இன்று மதியம் இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் திடீர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட சுமார் 100 பேர் கையில் கோரிக்கை அடங்கிய பேனருடன் வெயிலில் அங்கு வந்து கோஷங்கள் போட்டனர்.
2021 திமுக தேர்தல் வாக்குறுதி 177 ல் கூறியபடி 2013 ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ஆசிரியர் தேர்வு க்கான தகுதி சான்றிதழை ஆயுட்கால சான்றிதழாக வழங்கப் சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும் என கூறப்பட்டு இருந்தது.
அதை நிறைவேற்றக்கோரி இன்று இவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கோட்டை போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதற்கு அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இங்கு வந்து எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்த பிறகு தான் இங்கிருந்து நகர்வோம் என்றனர். இதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.