அண்ணாமலை நடைபயணம்... தேமுதிகவிற்கு திடீர் அழைப்பு..

Update: 2023-07-26 10:15 GMT

அண்ணாமலை நடைபயணம்...

அண்ணாமலை நடைப்பயண தொடக்க விழாவுக்கு, பெரிதும் நம்பியிருந்த ஓபிஎஸ், டிடிவி தினகரனை முற்றிலும் புறக்கணித்த பாஜ தலைமை தற்போது தேமுதிகவிற்கு பாதயாத்திரையில் பங்கேற்க வருமாறு பாஜக அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. அந்த வகையில் 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து ஆட்சி அமைக்க தேவையான இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து குறைந்த பட்சம் 25 தொகுதிகளை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக தமிழகத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ள 9 இடங்களில் தேர்தல் பணிகளை ஏற்கனவே துவக்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கட்சிக்கு ஆதரவு திரட்டவும், பலம் சேர்க்கவும் 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் தமிழக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடைபயணம் செல்வதற்கு திட்டமிட்டு உள்ளார். இந்த நடைபயணம் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நாளை மறுநாள் (28-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் தொடங்க உள்ளது. இந்த நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா வருகை தர உள்ளார்.

ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பரந்த நிலப்பரப்பில் பாராளுமன்ற வடிவில் மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அமருவதற்காக தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமித்ஷா, அண்ணாமலை, பா.ஜ.க. தலைவர்களை வரவேற்று விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை நடைபயணத்தில் பங்கேற்க இதுவரை சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். 234 தொகுதிகளிலும் 100 நாட்கள் நடைபயணம் செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த யாத்திரை நடைபெறுகிறது.

ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி நடைபெறும் முதற்கட்ட யாத்திரை ஆகஸ்ட் 22-ந்தேதி நிறைவடைகிறது. அதன் பிறகு சிறு சிறு இடைவெளிகளுடன் அடுத்தடுத்த கட்டங்களாக யாத்திரை நடைபெறுகிறது. ஜனவரி மாதம் சென்னையில் யாத்திரை நிறைவடைகிறது. இந்த நிறைவு நாளில் பிரதமர் பங்கேற்க இருக்கிறார்.

அமித்ஷா பங்கேற்று பேசும் இந்த தொடக்க விழாவில் பங்கேற்க அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தேமுதிக தற்போது வரை யாருடனும் கூட்டணியில் இல்லை. லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, கட்சித் தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்றும் பிரேமலதா கூறியிருந்தார். முதல்வர் ஸ்டாலினுடன் நான் தொலைபேசியில் பேசியதாக சிலவதந்திகள் பரவுகின்றன. மறைமுகமாக கூட்டணி குறித்து பேசும் பழக்கம் தேமுதிகவுக்கு கிடையாது என்றும் பிரேமலதா தெரிவித்திருந்தார் .

இதற்கிடையே திடீர் திருப்புமுனையாக அண்ணாமலை தொடங்கும் பாதயாத்திரை பயண கூட்டத்தில் பங்கேற்க தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் செல்வாரா பிரேமலதா? தேசிய ஜனநாயக் கூட்டணியில் மீண்டும் தேமுதிக இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதே நேரத்தில் நாங்கள் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று கூறி வரும் ஓ.பன்னீர் செல்வம் டீமிற்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News