கோடையில் ஏற்படும் காட்டூத்தீ தடுப்பு ஆலோசனை கூட்டம்
கோடைகாலங்களில் வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோடைகாலங்களில் வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம் துணை இயக்குநர் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் தேவராஜ் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்ததாவது, விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு வட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியானது 2021 ஆம் ஆண்டு இந்திய அரசால் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் குறிப்பாக மார்ச் மாதம் முதல் ஜீன் மாதம் வரை ஏற்படும் வறட்சி காரணமாக காட்டுத் தீ ஏற்படுகிறது.
2023-ஆம் ஆண்டு 26 முறையும், 2024-ஆம் ஆண்டு தற்போது வரை 7 முறையும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்படாமல் தடுப்பதற்கு அனைத்து துறைகளின் ஒத்துழைப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
வனப் பகுதியில் கால்நடை மேய்ச்சல், மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் சிறு வன பொருட்கள் சேகரம் செய்தல், சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் அத்துமீறி நுழைதல், வனப் பகுதியில் உள்ள கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள், தனியார் ஏலத் தோட்டங்களில் பணிபுரியும் பணியாளர்கள் போன்ற காரணிகளால் காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்படுவதை தடுப்பதற்காக தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டும், வனத்துறையில் உள்ள வனச்சரகங்களிலும் தலா 3 தீ தடுப்பு காவலர்கள் நியமிக்கபட்டும் உள்ளனர்.
மேலும், காட்டுத் தீ தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். வனப்பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் வனப்பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், காட்டுத் தீ ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் குறித்த விழிப்புணர்வு பலகைகளை வைக்க வேண்டும். மேய்ச்சல் செல்வோர் மற்றும் தனியார் தோட்டங்களில் பணிபுரிவோர் ஆகியோரிடம் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
விதிமுறைகளை மீறி வனப்பகுதியில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, இந்து சமய அறநிலையத்துறை, விவசாயத்துறை உள்ளிட்ட துறைகள் காட்டுத் தீ ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.