செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்!!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமின் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்து இருந்தது. செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை முடிந்து 37 நாட்களுக்கு பிறகு நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா மற்றும் ஏ.ஜி.மாசி ஆகியோர் தீர்ப்பளித்தனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 471 நாட்களுக்கு பின் அவருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.