மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க 14 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரம்!!
மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை தடுத்திட கோவையில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கழிவுகள் கொட்டுதல், சட்டவிரோதமாக விலங்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்திட கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் எல்லைக்குள் பயோ மெடிக்கல் கழிவுகள் கொட்டுதல், சட்டவிரோதமாக விலங்குகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்திட கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் போக்குவரத்து மற்றும் பயோமெடிக்கல் கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்திடவும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுத்திடவும், சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்கள் தங்களது கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள், தரகர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழக எல்லையில் இருந்து விலங்குகள் கொண்டு செல்லும் போது, உரிய மருத்துவரின் சான்று பெற்றும், உரிய வழிமுறைகளைப் பின்பற்றியும் விலங்குகள் வாகனம் மூலம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியளர்கள் மற்றும் தாசில்தார்கள் திடீர் தணிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.