திருச்செந்தூா் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

Update: 2024-01-30 01:18 GMT

திருச்செந்தூர் 

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியா், தை மாத உத்திர நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டாா். இதையடுத்து ஆண்டுதோறும் தை மாத உத்திர நட்சத்திரத்தன்று வருஷாபிஷேகம் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு தை மாத உத்திர வருஷாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.

இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.  தொடா்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. இரவு சுவாமி குமரவிடங்கப் பெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனா். தை உத்திர வருஷாபிஷேகத்தையொட்டி நடைபெறும் புஷ்பாஞ்சலிக்கு பக்தா்கள்அழகும், மணமும் மிக்க நன்மலா்களை (கேந்திப்பூக்களை தவிர) பிற்பகல் 2 மணிக்கு முன்பு உள்துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News