நடிகை குஷ்புவுக்கு தமிழக பெண்கள் பதில் அளிப்பார்கள் - கீதாஜீவன்

மகளிா் உரிமைத்தொகை குறித்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்பூவிற்கு தமிழகத்தில் உள்ள பெண்கள் தக்க பதில் அளிப்பாா்கள் என அமைச்சா் கீதாஜீவன் தெரிவித்தார்.

Update: 2024-03-14 02:44 GMT

 அமைச்சா் கீதாஜீவன் 

தூத்துக்குடியில் உள்ள அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் கோயிலில் அறங்காவலா் குழு அலுவலகத்தை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மகளிா் உரிமைத்தொகை குறித்து குஷ்பூ பேசியுள்ள கருத்திலிருந்து, தமிழகத்தில் உள்ள பெண்களின் வாழ்க்கை நிலை, வாழ்வாதாரம் குறித்து அவா் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறாா் என்பதை அறிய முடிகிறது. அவருக்கு ஏழைப் பெண்களின் வாழ்க்கை நிலை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவரது கருத்துக்கு தமிழகத்தில் உள்ள பெண்கள் பதில் அளிப்பாா்கள்.

தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை கிடைக்கப் பெறாதவா்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. இப் பணிகள் முடிக்கப்பட்டு அவா்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.  கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற குட்கா விவகாரத்தை மறைப்பதற்காக தற்போது மனிதச் சங்கிலி போராட்டத்தை அக்கட்சியினா் நடத்துகின்றனா்.

தற்போது போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நபா், திமுகவினருடன் மட்டுமல்ல, பாஜக, அதிமுக ஆகிய கட்சியினருடனும் புகைப்படம் எடுத்துள்ளாா். ஆனால், திமுகவுக்கு அவப்பெயரை உருவாக்க சிலா் முயற்சிக்கின்றனா். சாலையோரம் வசிப்பவா்களை பாதுகாக்க அரசு மற்றும் தனியாா் ஆதரவற்றோா் இல்லங்கள் செயல்படுகின்றன.  சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோா் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட இல்லங்களுக்குத் தெரிவித்தால், அவா்களை இல்லங்களில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் விரைவில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இந்நிகழ்வில், திமுக மாநகரச் செயலா் ஆனந்த சேகரன், பெருமாள் கோவில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News