அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசியர்கள் - டி டி வி தினகரன்

அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் தமிழ்த்துறைகளுக்கு தேவையான பேராசிரியர்களை நியமித்து, அத்துறைகள் தடையின்றி செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2024-05-29 07:12 GMT

டி டி வி தினகரன் 

அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் மூடப்படும் தமிழ்த்துறைகள் – தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டை உலகறிய உதவும் தமிழ்த்துறைகள் தடையின்றி செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஐதராபாத், உஸ்மானியா, பெங்களூரு, மைசூரு மற்றும் மும்பை பல்கலைக்கழகங்களில் இயங்கிவரும் தமிழ்த்துறைக்கான பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத காரணத்தினால் அத்துறையை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ் மொழி குறித்து ஆய்வு செய்ய முடியாத சூழல் நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, பஞ்சாப், லக்னோ, அலகாபாத், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைகள் அடுத்தடுத்து மூடப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை காரணமாக கொண்டு தமிழ்த்துறைகள் மூடப்படுவது தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாகவும், தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகவும் திகழும் தமிழ் மொழியின் தொன்மை, பண்பாடு, நாகரீகத்தை உலகறியச் செய்யவும், தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் வாழ்வியலையும் வெளிக்கொண்டுவரும் நோக்கத்தில் அண்டைமாநில பல்கலைக்கழகங்களில் நிறுவப்பட்ட தமிழ்த்துறைகள் மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமானதாகும்.

எனவே, நம் இனத்தின் அடையாளமான தனித்துவமிக்க தமிழ் மொழியை பாதுகாக்கும் நோக்கில், அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் தமிழ்த்துறைகளுக்கு தேவையான பேராசிரியர்களை நியமித்து, அத்துறைகள் தடையின்றி செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News