மே 13 முதல் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு
நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு மே 13 ஆம் தேதி முதல் முதல் மே 17 ஆம் தேதி வரை எமிஸ் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS -ID உள்நுழைவின் மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆசிரியர்களால் ஒவ்வொரு நாளும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிலுவையின்றி உடனடியாக வட்டாரக் கல்வி அலுவலர் / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட வேண்டும். மேற்படி அலுவலர்களால் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்கள். ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு முழுமையான வடிவில் பிரதி எடுத்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொது மாறுதல் கலந்தாய்விற்காக வரும் மே 17ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்த ஆசிரியர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
எனவே, எவ்வித விடுதலுமின்றி மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து உரிய அலுவலர்களால் நாள்தோறும் நிலுவையில்லாமல் ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் மாறுதலுக்கு முன்பாக நடைபெறும். நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 ஆயிரத்து 484 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.